economics

img

மீண்டும் முடிவை மாற்றிய இந்தோனேசியா...! முடிவா என்னதாம்ப சொல்ல வரீங்க... 

உலகின் மிகப்பெரிய பாமாயில் ஏற்றுமதி நாடான இந்தோனேசியா எடுத்துள்ள முக்கியமான முடிவால் இந்தியாவில் முக்கியச் சமையல் பொருட்களில் ஒன்றான பாமாயில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ கடந்த வார வெள்ளிக்கிழமை பாமாயிலின் உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான எண்ணெய் தன்நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 28 முதல் பாமாயில் ஏற்றுமதியை மொத்தமாகத் தடை செய்ய உள்ளதாக அறிவித்தார். ஆனால் அடுத்த 2 நாட்களில் சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதிக்கு எவ்விதமான தடையும் இருக்காது என இந்தோனேசிய அரசு விளக்கம் கொடுத்தது. 

இந்நிலையில் இன்று மீண்டும் தனது முடிவை இந்தோனேசிய அரசு மாற்றியுள்ளது. அதில் உள்நாட்டு விலை உயர்வு தனியும் வரை, சமையல் எண்ணெய் உற்பத்திக்கான மூலப்பொருட்கள், சுத்திகரிக்கப்படாத மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டுத் தலைமை பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் ஏர்லாங்கா ஹார்டார்டோ தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்யில் 40 சதவிகிதம் பாமாயில்தான். இதில் 60 சதவிகிதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமாக பாமாயிலை அதிகளவில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தோனேசியாவில் இந்த தடை உத்தரவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தோனேசியாவின் இந்த தடை உத்தரவு மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தடை இன்று முதல் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;